தரைக்கு வந்த தங்கமீன்!
Feb 11, 2010
பொன்யோ... சின்னக் குழந்தைகளின் விசித்திரமான கற்பனைக் கதைகளை அனிமேஷன் படங்களில் அப்படியே கொண்டுவருவதில் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநர் ஹயாயோ மியாசாகியின் மற்றுமொரு டிவைன்! டிஸ்னியின் வெளியீடாக வந்திருக்கும் இந்தப்படம் எனக்குப்பிடித்த மிகச்சிறந்த அனிமேஷன் படங்களில் ஒன்று!
கடல் என்பது உலகத்தின் ஒரு பகுதி என்பதைவிட கடலே ஒரு தனி உலகந்தான்! விசித்திரமான அந்த உலகத்தைப் பற்றி எத்தனையோ கதைகள் உலவுகின்றன... அப்படியொரு கதைதான் பொன்யோ!
பொன்யோவின் கதை ஷோர்ட் அண்ட் ஸ்வீட்டாக இதோ...
கடலின் ஆழத்தில் உள்ள ஒரு மந்திர நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஒரு மந்திரசக்தி வாய்ந்த, மனித முகங்கொண்ட ஒரு தங்கமீன் வெளியுலகைப் பார்க்கத் தன் தந்தையை மீறிக் கிளம்புகிறது. கடலுக்கு அருகே உள்ள ஒரு சிறு குன்றின் உச்சியில் வசிக்கும் சஸ்கே என்னும் சிறுவனின் நட்பு அவளுக்கு அங்கே கிடைக்கிறது. அவன் அவளை பொன்யோ என பெயரிட்டு ஒரு வாளியில் வைத்து நட்பு பாராட்டுகிறான். இதற்கிடையில் அவளின் தந்தை பொன்யோவை தேடிக்கொண்டு வந்து அவளை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். அவளை பிரிந்து துயரமடைகிறான் சஸ்கே. பொன்யோ மீண்டும் மேலே செல்ல விரும்புகிறாள். அவள் தந்தையோ மனிதர்கள் நம்பத் தகுந்தவர்களில்லை என்கிறார். சொன்ன பேச்சை கேட்காத பொன்யோவை உறைய வைத்து விட்டுத் தந்தை வெளியேறுகிறார். சஸ்கே மீது கொண்டிருந்த நட்பு அவளை அந்த உறைநிலையிலிருந்து விடுவிக்கிறது. தன் சகோதரர்களின் துணையோடு மனித உருவங் கொண்டு அவனை நோக்கிச் செல்கிறாள் பொன்யோ. அவள் மனித உருவம் எடுத்திருப்பதால் இயற்கைச் சமநிலை குலைந்து, கடல் சீற்றமடைந்து அருகிலுள்ள நிலப்பகுதிகளை மூழ்கடித்து விடுகிறது. இது சீர்ப்பட வேண்டுமானால் பொன்யோ மீண்டும் தங்கமீனாக வேண்டும். தன் நண்பனை இழக்க வேண்டும். அவள் தன் நண்பனை இழந்தாளா?
மலை உச்சியை நோக்கி சஸ்கே காரில் செல்ல, அவனை நோக்கி பொன்யோ கடலலைகள் மேலேறி, மீன்கள் மேலேறி ஒடும் காட்சி... பன்றி இறைச்சிதான் உணவாக வேண்டும் எனத் தன் தகப்பனிடம் அடம்பிடிக்கும் காட்சி... சிறிய படகொன்றில் பொன்யோ தூங்கி வழியும் காட்சி... பாலை எடுத்துச் சிறு குழந்தைக்குத் தரும் காட்சி... என இப்படத்தில் மயக்கும் இசையில் மனதைத் தொடும் காட்சிகள் ஏராளம்!
படம் முடியும்போது வந்த கண்ணீரைத் தவிர்க்கமுடியவில்லை. வானவில்லாய் மறைந்துவிட்ட அந்த நாட்கள்... நாம் சின்னக் குழந்தைகளாய்த் துள்ளித்திரிந்த அந்த நாட்கள்... அவை இனியொருபோதும் திரும்பி வரப்போவதில்லை...