பயோஷோக்: கடலுக்கடியில் ஒரு கனவுலகம்
Mar 6, 2011
அது 1960. அட்லாண்டிக் கடற்பிராந்தியத்தில் ஒரு கொடூர விமான விபத்து நடக்கிறது. விபத்தில் தப்பிப்பிழைத்த ஒரேயொரு பயணியான ஜாக் நீந்திச்சென்று கடலின் நடுவிலுள்ள ஒரு சிறிய தீவில் கட்டப்பட்டிருக்கும் லைட்ஹவுசை அடைகிறான். தற்செயலாக அங்கிருக்கும் ஒரு சிறிய நீர்மூழ்கிக் கப்பல் போன்ற அமைப்பை அடையும் ஜாக் அதில் பயணித்து கடலின் அடித்தளத்தில் கட்டப்பட்டிருக்கும் மர்மங்கள் நிறைந்த ரெப்சர் என்ற நகரத்தை அடைகிறான்.
ரெப்சர், உலக அரசாங்கங்களின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி விஞ்ஞானிகள் இயற்கைக்கு விரோதமான ஜெனடிக் ஆய்வுகளைச் செய்வதற்கு அன்ட்ரூ ரயான் என்ற பெரும் பணக்காரனால் கடலுக்கடியில் கட்டப்பட்ட இரகசிய நகரம். நகரில் வாழ்பவர்கள் ப்ளாஸ்மிட் எனப்படும் மருந்துகளை உடம்பில் ஏற்றிக்கொண்டு சாதாரண மனிதர்களால் செய்யமுடியாத வெறும் கையினால் மின்னலை உருவாக்குவது, தீயை உருவாக்குவது, தொலைவிலுள்ள பொருட்களை நகர்த்துவது போன்ற காரியங்களைச் செய்கிறார்கள். ஜாக் சென்ற சமயத்தில் அந்த நகரின் சமூகக் கட்டமைப்பு சிதைந்து அளவுக்கதிகமான ப்ளாஸ்மிட் பாவனையினால் விகாரமடைந்த, மனிதத்தன்மையற்ற ஒரு சமூகமே காணப்படுகிறது. அவர்களிடமிருந்து தப்பித்து ஜாக் எப்படி கரையை அடைகிறான் என்பதே 2007ல் வெளிவந்த பயோஷோக் என்ற கணினி விளையாட்டின் கதை.
முழுக்க முழுக்க கடலுக்கடியில் நடக்கும் பெர்ஸ்ட் பெர்சன் ஷூட்டர் வகை விளையாட்டான இது ஆண்டின் மிகச்சிறந்த கணினி விளையாட்டு உட்பட ஏராளமான விருதுகளை வென்றது. விளையாடும்போது ஒரு அக்வேரியத்துக்குள் நுழைந்த உணர்வுதான் ஏற்படும். கண்ணாடிச்சுவருக்கு மறுபுறம் கடலில் நீந்திக்கொண்டிருக்கும் வண்ணமீன்கூட்டங்கள் நீங்கள் அருகே சென்றதும் சிதறியோடும். பலவிதமான ஆயுதங்களையும் ப்ளாஸ்மிட்களையும் யூஸ் பண்ணவேண்டிவரும். மிகவும் என்ஜாய் பண்ணி விளையாடக்கூடிய விளையாட்டு.
நான் இப்போது விளையாடிக்கொண்டிருப்பது பயோஷோக் 2. பயோஷோக் நடந்து 10 வருடங்களின்பின் ரெப்சரில் நடக்கும் கதை. அடுத்து வரவிருப்பது பயோஷோக் இன்பினிட்டி. இது வானில் மிதக்கும் நகரமொன்றில் நடக்கும் கதை. 2012ல் வருகிறது. விளையாடக் காத்திருக்கிறேன்.