<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=5909598961843294005&amp;blogName=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=LIGHT&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://minnixs.blogspot.com/search&amp;blogLocale=en&amp;homepageUrl=http://minnixs.blogspot.com/&amp;vt=8948841889471684988" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

மின்னிக்ஸ்

ஒரு வடிவமைப்பாளனின் வலைப்பதிவு

பாத்: எங்கே செல்லும் இந்தப் பாதை?

Jan 20, 2012

உலகின் பேவரிட் சோசியல் நெட்வொர்கான பேஸ்புக், ஒரு பில்லியன் உறுப்பினர்களை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்நாட்களில் யாரவது பேஸ்புக் உருப்படாது என்று சொன்னால் என்ன சொல்வீர்கள்? ஆனால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. காரணம் கூகிள் ப்ளஸ்ஸோ ட்விட்டரோ அல்ல. பாத். பாத் நிச்சயம் பேஸ்புக் போன்ற சோசியல் நெட்வொர்க் அல்ல. சோசியல் நெட்வொர்க் 2.0 என்றுகூடச் சொல்லலாம். அடுத்த தலைமுறை சோசியல் நெட்வொர்க். பாத் எப்படிச் செயற்படுகிறது என்பதற்கு முன் பேஸ்புக் எப்படிச் செயற்படுகிறது என்று பார்த்துவிடலாம்.

நீங்கள் முதலில் பேஸ்புக்கில் இணைந்து கொள்கிறீர்கள். உங்கள் ஈமெயில் அட்ரஸ்புக்கில் உள்ளவர்களில் யாரவது ஏற்கனவே பேஸ்புக்கில் இருந்தால் அவர்களையும் உங்கள் நண்பர்களாக இணைத்துக்கொள்ளவா? என்று பேஸ்புக்கே கேட்கும். சரி சொல்வீர்கள். இப்போது உங்களுக்கு பேஸ்புக்கில் ஒரு நட்புவட்டம் உருவாகியிருக்கும். அவர்கள் அநேகமாக உங்களோடு நெருக்கமான அல்லது உங்களுக்குத் தெரிந்த நபர்களாகவே இருப்பார்கள். இது இப்படியே இருந்தால் பிரச்சினையில்லை. உங்கள் ஃப்ரெண்ட்டின் டைம்லைனில் ஒரு அழகான கேர்ள் (அவளது ப்ரோஃபைல் பிக்சர் அப்படித்தான் சொல்கிறது!) அடிக்கடி வந்து போஸ்ட் பண்ணுகிறாள் என்றால் நீங்கள் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கமாட்டீர்கள். அவளுக்கு ஒரு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பீர்கள். நீங்களும் என் ஃப்ரெண்ட் ஒருவரைப்போல கொஞ்சம் சீரியஸ் கேஸ் என்றால் அவள் இன்பாக்சுக்கு மெசேஜ் மெசேஜாக அனுப்பி அவளை அட் பண்ணவைத்துவிட்டுத்தான் விடுவீர்கள். இதுவே அந்த கேர்ள்ளாக நீங்கள் இருந்தால் எப்படியிருக்கும்? நாளுக்குநாள் முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்களையும் மெசேஜ்களையும் கண்டு உங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும். இந்தத் தொல்லை தாங்காமலோ அல்லது அழகாக இருக்கிறான் (மறுபடியும் ப்ரோஃபைல் பிக்சர் அப்படித்தான் சொல்கிறது!) அழகாகப் பேசுகிறான் என்றோ ஒருசிலரையாவது அட் பண்ணிவிடுவீர்கள். இப்போது உங்கள் நட்புவட்டம் இந்தப் புதிய நபர்களின் வரவால் பெரிதாகியிருக்கும். உங்களோடு நெருக்கமான அல்லது உங்களுக்குத் தெரிந்த நபர்கள், பேஸ்புக்கில் புதிதாக அறிமுகமானவர்கள், பெண் பெயர்களில் உலவும் ஆண்கள், ஏஞ்சல்கள், ப்ரின்சஸ்கள், க்வீன்கள், பேய்கள், பிசாசுகள் என்று! அளவுக்கதிகமான நபர்களின் வரவால் பேஸ்புக்கில் நீங்கள் அடிக்கடி தொடர்பிலிருக்கும், உங்கள் நண்பர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வதாக்கத் தோன்றும். (உண்மையும் அதுதான்!) அப் மற்றும் கேம் ரிக்வெஸ்ட்கள், போட்டோ டெக்குகளின் தொல்லை அதிகரிக்கும். கண்டவர்களும் உங்களுடன் ஃப்ளேர்ட் பண்ணுவார்கள். இன்பாக்ஸ் பைத்தியக்காரத்தனமான வேகத்தில் நிறையும். தேவையில்லாத குரூப்களில் உங்களை ஒரு கூட்டம் அட் பண்ணும், தத்தமது ஃபேன் பேஜ்களை லைக் பண்ணச்சொல்லி அழும். போதாக்குறைக்கு உங்களை வேவுபார்க்கவென்றே சிலர் இருப்பார்கள். பேஸ்புக் இப்போது சனநெருக்கடி மிகுந்த யாரும் யாரைப்பற்றியும் கவலைப்படாத ஒரு நரகம்... நகரம்.

சிலவருடங்களுக்கு முன் மைஸ்பேஸ் இன்றைய பேஸ்புக்கின் இடத்தில் இருந்தபோது அமெரிக்காவில் ஒருவகையான ஏற்றத்தாழ்வு அவதானிக்கப்பட்டது. நன்கு படித்தவர்களும், வைட் காலர் வேலைபார்ப்பவர்களும், மேல்தட்டு வர்க்கத்தினருமே பேஸ்புக்கை யூஸ் பண்ணுவதாகவும். அவ்வளவாகப் படிக்காதவர்களும், ப்ளூ காலர் வேலைபார்ப்பவர்களும், கீழ் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் மைஸ்பேஸ் யூஸ் பண்ணுவதாகவும் அது காட்டியது. இன்று அப்படியில்லை. பஸ் கண்டக்டராக வேலை பார்க்கும் எனக்குத்தெரிந்த ஒருவர்கூட தீவிரமாக பேஸ்புக் யூஸ் பண்ணுகிறார். நாம் அனைவரும் கனவுகாணும் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகளும் இல்லாத ஒரு உலகம் உண்மையில் கொடூரமானது.

பேஸ்புக் எதை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டதோ அந்த இலக்கை அடையத் தவறிவிட்டது. 2004களில் பேஸ்புக் என்ன சொன்னதோ அதைத்தான் இப்போதும் சொல்கிறது எனினும் (Facebook is a social utility that connects people with friends and others who work, study, and live around them.) அதை யாரும் காதில் வாங்கிக்கொள்வதாகத் தெரியவில்லை. மேலும் பேஸ்புக்கின் வடிவமைப்பு சிக்கலாக்கப்பட்டு அளவுக்கதிகமாக வர்த்தகமயப்படுத்தப்பட்டுவிட்டது. நீங்கள் 2004, 2005, 2006களில் பேஸ்புக் யூஸ் பண்ணியிருந்தால் 2009களின் ஆரம்பம் வரை நீடித்த அந்த இனிமையான பேஸ்புக் தருணங்கள் உங்களைவிட்டுச் சென்றுவிட்டதை உணர்வீர்கள். இந்த நிலையில்தான் பேஸ்புக்குக்கு ஒரு மாற்றீடு தேவைப்படுகிறது. ஆனால் அது நிச்சயம் பேஸ்புக்கிலிருந்து வரக்கூடாது. பேஸ்புக் போலிருக்கக்கூடாது. நிச்சயம் கூகிள் ப்ளஸ் அல்ல. ட்விட்டர் அல்ல. டயாஸ்போராவும் அல்ல.

லோர்ட் ஒஃப் த ரிங்ஸில் வரும் "உலகம் மாறிவிட்டது, அதை என்னால் நீரில் உணரமுடிகிறது, அதை என்னால் நிலத்தில் உணரமுடிகிறது, அதை என்னால் காற்றில் சுவாசிக்க முடிகிறது..." என்ற வரிகளைப்போல உலகம் மாறிவிட்டது. டெஸ்க்டாப்களின் இடத்தை லேப்டாப்களும் டேப்ளட்களும் ஆக்கிரமித்துவிட்டன. அநேகமாக எல்லோரிடமும் ஸ்மார்ட்ஃபோன்கள் இருக்கின்றன. வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு அண்ட்ரோய்ட் ஃபோன் கிடைக்கிறது. செல்லுமிடமெல்லாம் அதிவேக இணையமிருக்கிறது, அதுவும் இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது. இப்போது யாரும் டெஸ்க்டாப்பில் இருந்துகொண்டு பேஸ்புக் பார்ப்பதில்லை. மொபைல் டிவைஸ்களிலேயே வருகிறார்கள். பேஸ்புக் வெப்சைட் யூஸ்பண்ணுவதைவிட பேஸ்புக் அப் யூஸ்பண்ணுவது அதிகரித்து வருகிறது. இப்போது பாத் என்ன செய்கிறது?

பாத்தின் வரலாறு பற்றி நான் இங்கு சொல்லப் போவதில்லை. நீங்களே கூகிள் பண்ணிக்கொள்ளுங்கள். பாத் என்ன செய்கிறது என்றுமட்டும் சொல்கிறேன். பாத் ஒரு வெப்சைட் அல்ல. அது ஒரு அப். அதுவும் இப்போதைக்கு ஐஃபோன் மற்றும் அண்ட்ரோய்ட் ஃபோன்களுக்கு மட்டுமே கிடைக்கும் அப். பாத், பேஸ்புக் போன்ற ராட்சத நெட்வொர்க் அல்லவெனினும் நீங்கள் ஒரு சோசியல் நெட்வொர்க்கில் செய்யக்கூடிய அத்தனையையும் செய்யலாம். ஃப்ரெண்ட்ஸ், மற்றும் ப்ரைவசி என்கிற விடயங்களில்தான் பாத் பேஸ்புக்கிலிருந்து வேறுபடுகிறது. அதிகபட்சம் 150நபர்களை மட்டுமே உங்கள் ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் கொண்டிருக்க முடியும். வெறும் 150தானா என்று கேட்பவர்களுக்கு: நீங்கள் பேஸ்புக்கில் அதிகபட்சம் 5000நபர்களை உங்கள் ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் கொண்டிருக்க முடியும். அப்படி 5000பேர் உங்கள் ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த 5000பேருடனும் நீங்கள் தினந்தினம் உறவாடுகிறீர்களா? அந்த 5000பேர்களையும் உங்களுக்குத்தெரியுமா? அதை விடுங்கள், அந்த 5000பேரும் உங்களுடன் உறவாடுகிரார்களா? அவர்களில் எத்தனைபேர் உண்மையான நபர்கள் என்று தெரியுமா? 5000பேர் அல்ல ஒரு 500? அதில் உங்களுக்கு எத்தனை பேரைத்தெரியும்? ஒரு 10? 20? 30? 40? 50? 100? ஒரே நேரத்தில் ஒரு சராசரி மனிதனால் 40-60பேருடன்தான் தொடர்பிலிருக்கமுடியும். நம்மில் பெரும்பாலானோர் அந்த எண்ணிக்கையைக்கூடத் தொடுவதில்லை. இப்போது 150 நண்பர்கள் என்ற எண்ணிக்கையே உங்களுக்கு அதிகமாகத் தோன்றும்.

உங்களிடம் ஒரு ஐஃபோனோ அண்ட்ரோய்ட் ஃபோனோ இருக்கிறதா? இன்றே பாத்தில் இணைந்து உண்மையான, உங்களுக்கே உரித்தான, உங்கள் மனதுக்கு நெருங்கிய நண்பர்களை இணைத்துக்கொள்ளுங்கள். அன்பைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இதுவும் சில வருடங்களுக்குத்தான். அப்புறம் பேஸ்புக்கோ அல்லது கூகிளோ பாத்தை வாங்கித் தன்னுடன் இணைத்துக்கொள்ளும். அல்லது இப்போது பேஸ்புக்கில் இருக்கும் கூட்டம் அங்கும் கூடிவிடும்.

Labels: , , , ,